‘உங்கள் வெகுமதியை பெற இன்றே கடைசிநாள்’ வங்கி பெயரில் வரும் குறுஞ்செய்திகள் பொதுமக்கள் யாரும் நம்ப வேண்டாம்
திருப்பூர், நவ. 11: தொழில்நுட்ப வளர்ச்சி நாளுக்குநாள் அசுர வேகத்தில் வளர்ச்சி அடைந்து வருகிறது. தொழில்நுட்பம் வாழ்க்கையை எளிதாக்கும் அதே நேரத்தில் இணையதளம் வாயிலாக நடைபெறும் சைபர் கிரைம் குற்றங்கள் பெரும் அச்சுறுத்தலை உருவாக்கியுள்ளது. சமீப காலமாக அதிக பயனர்களைக் கொண்ட ஸ்டேட் பேங்க் நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பது போன்ற வெகுமதி பாய்ண்டுகளை பெற்றுக்கொள்ளுங்கள் என்ற குறுந்தகவல் மிகப்பெரும் மோசடியாக அமைந்துள்ளது. ஸ்டேட் பேங்க் வாடிக்கையாளர்களை குறிவைத்து, அவர்கள் வங்கி கணக்குகளில் செய்துள்ள பரிவர்த்தனை மூலம் பெற்றுள்ள வெகுமதி புள்ளிகளை பெற இன்றே கடைசி நாள். உங்களுக்கு சுமார் 7500 ரூபாய் மதிப்புள்ள வெகுமதி புள்ளிகள் தயாராக உள்ளது.
அதற்கான இந்த லிங்கை கிளிக் செய்து உங்கள் வெகுமதியை பெறுங்கள் என எஸ்.எம்.எஸ் அல்லது வாட்ஸ்ஆப் மூலமாக அனுப்பப்படுகின்றன. சைபர் கிரைம் குற்றங்கள் குறித்த போதிய விவரம் இல்லாத பயனாளர்கள் வாட்ஸ் ஆப்புக்கு வரும் லிங்கை கிளிக் செய்து அதில் கேட்கப்படும் விபரங்களை கொடுப்பதன் மூலம் அவர்களது வங்கி கணக்கில் இருந்து பணம் கையாடல் செய்யப்படுகிறது. எனவே, இதுகுறித்து வரும் எஸ்எம்எஸ், வாட்ஸ்ஆப் மற்றும் மின்னஞ்சல்களை உஷாராக கண்காணிக்க சைபர் கிரைம் போலீசார் மற்றும் வங்கி நிர்வாகம் சார்பில் வலியுறுத்தப்பட்டு உள்ளது.

