தாராபுரம், நவ.11: தாராபுரத்தில் 41 மாத பணி நீக்க காலத்தை பணி காலமாக அங்கீகரிக்க வலியுறுத்தி சாலை பணியாளர்கள் போராட்டம் நடத்தினர்.திருப்பூர் மாவட்டம், தாராபுரம்- உடுமலை சாலையில் உள்ள கோட்ட பொறியாளர் அலுவலகம் முன் நடந்த தொடர் முழக்க போராட்டத்திற்கு கோட்டத் தலைவர் வெங்கடசாமி தலைமை தாங்கினார். கோட்ட துணை தலைவர்கள் தங்கவேல் மற்றும் செல்வகுமார்,கோட்ட இணைச்செயலாளர் பொன்ராசு,மாநில செயற்குழு உறுப்பினர் ஜெகதீஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் கோட்டச்செயலாளர் தில்லையப்பன் கோரிக்கைகளை விளக்கி பேசினார். மேலும் தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர் சங்கத்தின் சார்பில் நெற்றியில் கருப்பு பட்டை அணிந்து கொண்டு நீதி தராசை கையில் ஏந்தி கும்மி அடித்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர். கோஷங்களை எழுப்பினர். அதில் சாலை பணியாளர்களின் 41 மாத படி நீக்க காலத்தை சென்னை உயர்நீதிமன்ற ஆணையின்படி பணி காலமாக முறைப்படுத்த வேண்டும், சென்னை உயர்நீதிமன்ற மேல்முறையீட்டினை திரும்பப் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை பணியாளர்கள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
+
Advertisement

