உடுமலை, டிச. 7: பனிக்காலமான டிசம்பர், ஜனவரி மாதங்கள் கொண்டைக்கடலை சாகுபடிக்கு ஏற்ற மாதங்களாகும். இதையடுத்து, உடுமலை பகுதியில் விவசாயிகள் கொண்டைக்கடலை சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக, ராகல்பாவி, வடபூதனம், ஆர்.வேலூர், வாளவாடி, பண்ணை கிணறு உள்ளிட்ட இடங்களில் பலநூறு ஏக்கரில் கொண்டைக்கடலை சாகுபடி செய்துள்ளனர்.
மேலும், காட்டுப்பன்றிகளிடம் இருந்து பயிர்களை பாதுகாப்பதற்காக தோட்டத்தை சுற்றிலும் சேலையால் வேலி அமைத்துள்ளனர். காற்று வீசும் போது சேலைகள் படபடவென அடிக்கும். இதனால், பன்றிகள் பயந்து அருகே வருவதில்லை என விவசாயிகள் தெரிவித்தனர். தற்போது, சாகுபடி செய்யப்பட்டுள்ள கொண்டைக்கடலை பயிர்கள் பிப்ரவரி மாதம் அறுவடை செய்யப்படும் என தெரிவித்தனர்.


