உடுமலை, டிச. 7: உடுமலை அருகேயுள்ள எலையமுத்தூரில் சாலையோரம் மலைபோல் குப்பை குவிந்து காணப்படுகிறது. இந்த ஊராட்சியில் திடக்கழிவு மேலாண்மை செயல்பாட்டில் இல்லை. உரிய இடங்களில் குப்பை தொட்டிகளும் வைக்கப்படவில்லை.இதனால், பொதுமக்கள் குப்பைகளை சாலையோரம் வீசி செல்கின்றனர். இவற்றால் சாலையில் செல்ல முடியாத அளவுக்கு துர்நாற்றம் வீசுகிறது. இறைச்சிக்கழிவுகளை நாய்கள், பறவைகள் கிளறி ரோட்டில் கொண்டு போடுகின்றன.
இதனால், வாகனத்தில் செல்வோருக்கு இடையூறு ஏற்படுகிறது. குப்பை குவிந்து கிடக்கும் இடத்தில் இருந்து 20 மீட்டர் தொலைவில் காய்கறி கழிவுகளில் இருந்து மண் புழு உரம் தயாரிக்கும் கூடம் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த கூடம் செயல்படாமல் பூட்டிக்கிடக்கிறது. இதனை செயல்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும். குப்பையை முறையாக அப்புறப்படுத்த ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


