மானூர்,அக்.30: விளைநிலத்தில் பயிர்களை சேதப்படுத்தியதை தட்டி கேட்ட பஞ்சாயத்து தலைவியை ஜாதி குறித்து அவதூறாக பேசிய கோழிப்பண்ணை உரிமையாளரை வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர். மானூர் அருகேயுள்ள கட்டாரங்குளத்தைச்சேர்ந்தவர் சிவகுமார் மனைவி சுதா (35). பஞ்சாயத்து தலைவியாக உள்ள இவர் அதே ஊரை சேர்ந்த முத்துப்பாண்டி என்பவரது நிலத்தை குத்தகை மூலம் பயிர் செய்து வருகிறார். மேலும் அந்த நிலத்திற்கு அருகே முத்துப்பாண்டியின் சகோதரர் ஆறுமுகம் மகன் காளியப்பன் (40) என்பவர் கோழிப்பண்ணை நடத்தி வருகிறார். இந்த பண்ணையில் உள்ள கோழிகள், சுதா விளைநிலத்தில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வந்துள்ளது. இந்நிலையில் கடந்த 26ம் தேதி கோழிப்பண்ணைக்கு சென்ற சுதா இது தொடர்பாக காளியப்பனிடம் தட்டி கேட்டதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த அவர், சுதாவை ஜாதி குறித்து அவதூறாக பேசியதுடன் கொலை மிரட்டலும் விடுத்துள்ளார். இது குறித்து மானூர் போலீசில் சுதா அளித்த புகாரின் பேரில் கொலை மிரட்டல் மற்றும் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து காளியப்பனை கைது செய்தனர்.
+
Advertisement
