Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

களக்காடு அருகே அரசு பஸ் வசதியின்றி கிராம மக்கள் தவிப்பு

களக்காடு, நவ. 28: களக்காடு அருகே தெற்கு அப்பர்குளம், வடக்கு அப்பர்குளம், நடுவக்குளம், புதுக்குளம் ஆகிய கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் 500க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்த கிராம மக்கள், மருத்துவம் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்கு களக்காட்டிற்கு தான் வந்து செல்கின்றனர். இதுபோல இங்குள்ள மாணவ- மாணவியரும் களக்காடு மற்றும் நெல்லையில் உள்ள கல்வி நிலையங்களில் படித்து வருகின்றனர். இந்த கிராமங்களுக்கு அரசு பஸ்கள் இயக்கப்படாததால் கிராம மக்கள் கடும் பாதிப்பிற்குள்ளாகி வருகின்றனர். மாணவ- மாணவியர் சடையமான்குளம் விலக்கிற்கு 2 கிமீ தூரம் நடந்து சென்று பஸ் ஏறும் அவலநிலை காணப்படுகிறது. பஸ்கள் இயக்கப்படாததால் மாணவ- மாணவியர் குறிப்பிட்ட நேரங்களுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். அவசர தேவைகளுக்கு கூட கிராமங்களில் இருந்து பொதுமக்கள் வெளிவர முடியாமல் சிரமப்படுகின்றனர்.

முன்பு களக்காடு- நெல்லைக்கு மீனவன்குளம், அப்பர்குளம், நடுவக்குளம், பாணான்குளம் வழியாக அரசு பஸ் இயங்கி வந்தது. இந்த பஸ்சும் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன் நிறுத்தப்பட்டு விட்டது. எனவே அப்பர்குளம், நடுவக்குளம் வழியாக 4 கிராம மக்களும் பயனடையும் வகையில் அரசு பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் வலியுறுத்தி உள்ளனர். இதுகுறித்து திமுக மாணவரணி மாவட்ட முன்னாள் செயலாளர் பண்டாரம் கூறுகையில், ‘அரசு பஸ்கள் இயக்கப்படாததால் திராவிட மாடல் ஆட்சியில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க..ஸ்டாலின் அமல்படுத்தியுள்ள பெண்களுக்கான இலவச பயண திட்டம் இந்த கிராம மக்களுக்கு எட்டாக்கனியாகவே உள்ளது. இதுகுறித்து போக்குவரத்து துறை அதிகாரிகளிடம் பலமுறை மனுக்கள் கொடுத்தும் பஸ்கள் இயக்கப்படவில்லை” என்றார்.