பணகுடி,நவ.27: பணகுடி பேருந்து நிலையம் அருகே அனுமதியின்றி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட பாஜ நிர்வாகிகள் உள்பட 25 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். பணகுடி அருகே வடக்கன்குளம் பகுதியை சேர்ந்தவர் இசக்கிமுத்து. இவர் கன்னியாகுமரி, பணகுடி, வள்ளியூர் பகுதியை சேர்ந்த சிலரிடம் ஒப்பந்த அடிப்படையில் ஜேசிபி மற்றும் ஹிட்டாச்சி இயந்திரங்களை பெற்று மற்ற நபர்களிடம் உள்வாடகை விட்டு தொழில் செய்து வந்தார். இந்நிலையில் அவர் கடந்த 1 மாதத்துக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து அவரிடம் வாகனங்களை ஒப்படைத்த உரிமையாளர்கள், தங்களது வாகனங்களை மீட்டுத்தர கோரி பணகுடி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அவர்கள் இது தொடர்பாக இருதரப்பினர்களையும் அழைத்து விசாரணை மேற்கொண்டனர். இதில் தனிப்பட்ட வணிக பரிவர்த்தனை மற்றும் உரிமை சம்பந்தப்பட்ட பிரச்னை என தெரிய வந்ததால் நீதிமன்றத்தை அணுகுமாறு போலீசார் அவர்களிடம் தெரிவித்தனர்.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தங்களது வாகனங்களை மீட்டு தரக்கோரி பணகுடி பேருந்து நிலையம் அருகே நவ.26ம் தேதி அதாவது நேற்று தர்ணா போராட்டம் நடத்த ேபாலீசில் அனுமதி கேட்டு கடிதம் அளித்தனர். ஆனால் டிஎஸ்பி போராட்டத்துக்கு அனுமதி மறுத்து கடந்த 24ம் தேதி பதில் அனுப்பினார். ஆனால் அதையும் மீறி நேற்று பணகுடி பேருந்து நிலையம் அருகே அழகிய பாண்டியபுரத்தைச் சேர்ந்த வீர நாகராஜேஷ், கன்னியாகுமரி மாவட்ட பாஜ ஒன்றிய அரசு நலத்திட்ட பணி பிரிவு மாவட்ட தலைவர் ரஜினிகாந்த், ரோஸ்மியாபுரத்தைச் சேர்ந்த ராபர்ட், காட்டுபுதூரைச் சேர்ந்த முத்துகிருஷ்ணன் உள்பட சுமார் 25 பேர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைதொடர்ந்து அனுமதி இல்லாமல் போராட்டம் நடத்தியதாக 25 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.


