சுரண்டை, செப். 27: சுரண்டை அருகே உள்ள சாம்பவர் வடகரை மாஞ்சோலை தெருவைச் சேர்ந்தவர் தேனையா. இவரது மனைவி திருமலையாச்சி(75). இவர் நேற்று பகல் 11 மணியளவில் சேர்ந்தமரத்தில் உள்ள தனது மகள் வீட்டிற்கு செல்வதற்காக சாம்பவர்வடகரையிலிருந்து அரசு பஸ்சில் சுரண்டை பஸ் நிலையம் வந்தார். பின்னர் அங்கிருந்து சேர்ந்தமரம் செல்வதற்காக புளியங்குடி செல்லும் பஸ்சில் ஏறியுள்ளார். பஸ் புறப்பட்டு ஆலடிப்பட்டி விலக்கு அருகில் சென்ற போது திருமலையாச்சி கழுத்தில் அணிந்திருந்த 3பவுன் தாலி செயினை மாயமானதால் சத்தம் போட்டுள்ளார்.
உடனடியாக டிரைவர், நடத்துனர் பஸ் முழுவதும் தேடியும் கிடைக்காததால் சுரண்டை போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சுரண்டை இன்ஸ்பெக்டர் ஹரிஹரன், மூதாட்டியிடம் விசாரணை நடத்தினார். அவரது புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர். பட்டப்பகலில் ஓடும் பஸ்சில் நடந்த இந்த சம்பவம் பயணிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் சுரண்டை பஸ் நிலையத்தில் செல்போன் உட்பட பொருட்கள் அடிக்கடி திருட்டு போவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.