வள்ளியூர், செப்.23: கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகேயுள்ள குளத்தூரைச் சேர்ந்த அனில்குமாரின் மகன் அருண் (33). நெல்லை மாவட்டம், காவல்கிணறு பகுதியில் செயல்படும் மகேந்திரகிரி இஸ்ரோவில் ஒப்பந்த தொழிலாளராக வேலை பார்த்துவந்த இவர், இதற்காக காவல்கிணறு அருகேயுள்ள பகுதியில் தனியாக அறையில் தங்கியிருந்தபடி பைக்கில் வேலைக்கு சென்று வந்தார். வழக்கம் போல் சம்பவத்தன்றும் தனது பைக்கில் இஸ்ரோவுக்கு சென்றுகொண்டிருந்தார். காவல்கிணறு நான்கு வழிச்சாலையில் சென்றபோது நாகர்கோவிலில் இருந்து திருநெல்வேலி நோக்கி வந்துகொண்டிருந்த கார், அருணின் பைக் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அருணை அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் மீட்டு நாகர்கோவில் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். ஆனால், அவர் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து குறித்து பணகுடி இன்ஸ்பெக்டர் ராஜாராம், எஸ்ஐ வினுகுமார் மற்றும் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
+
Advertisement