சங்கரன்கோவில்,செப்.23: 2026 சட்டப்பேரவை தேர்தலில் யாருடன் கூட்டணி குறித்து ஜன.7ல் முடிவு செய்யப்படும் என்று புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி ெதரிவித்தார். இதுகுறித்து சங்கரன்கோவிலில் நேற்று அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில் ‘‘சங்கரன்கோவில், வாசுதேவநல்லூர் தொகுதிகளில் பெரும்பாலான கிராமங்களில் எந்தவொரு அடிப்படை வசதியும் நிறைவேற்றப்படவில்லை. தாருகாபுரத்தில் மாதத்திற்கு ஒரு முறை தான் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. வாசுதேவநல்லூர் அருகே சுப்பிரமணியபுரம் கோயிலில் மக்கள் வழிபாடு செய்ய அனுமதி மறுக்கின்றனர். சுதந்திரப் போராட்ட வீரர் வெண்ணி காலாடிக்கு அவர் பிறந்த கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள மணிமண்டபத்தில் அனைவரும் மரியாதை செலுத்த அவர் பிறந்த தினமான டிச.20ம் தேதி அனுமதி வழங்க வேண்டும். தேவநேயப் பாவாணரின் சொந்த ஊரான கோமதிமுத்துபுரத்தில் அரசு தேவநேயப் பாவாணருக்கு மணிமண்டபம் கட்ட வேண்டும்.
சங்கரன்கோவில், நெல்லை, சென்னை உள்ளிட்ட இடங்களில் மணி மண்டபம் கட்டலாம். ஜமீன்தார் கட்டுப்பாட்டில் உள்ள ஒரு சில நிலங்களை அரசு மீட்டு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். 2026 ஜன.7ம் தேதி நடைபெற உள்ள புதிய தமிழகம் கட்சியின் மாநில மாநாட்டில் எந்தக் கட்சியுடன் கூட்டணி என்பது பற்றி முடிவு எடுக்கப்படும். 2026 சட்டமன்ற தேர்தலில் கூட்டணி ஆட்சிதான் வரும். அதில் புதிய தமிழகம் மட்டுமல்லாமல் அனைத்து சமுதாயத்தின் பங்களிப்பும் இருக்கும்’’ என்றார். பேட்டியின் போது மாநில துணை அமைப்பாளர் ராஜேந்திரன், தென்காசி கிழக்கு மாவட்டச் செயலாளர் ராசையா, வடக்கு மாவட்ட இணைச் செயலாளர் செல்வராஜ் உள்ளிட்டோர்
உடனிருந்தனர்.