தென்காசி,நவ.21: குற்றாலம் மெயினருவி தண்ணீரில் அடித்து வரப்பட்டு தடாகத்தில் விழுந்த 10 அடி நீள மலைப்பாம்பை கண்டு அருவியில் குளித்து கொண்டிருந்த சுற்றுலா பயணிகள் அதிர்ச்சியடைந்தனர். குற்றாலத்தில் கடந்த சில தினங்களாக இரவு வேளைகளில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கடந்த 2 தினங்களாக மெயினருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படவில்லை. நேற்று காலையில் ஐந்தருவியிலும் மதியத்திற்குப் பிறகு, மெயினருவியிலும் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் நேற்று மெயினருவியில் மலைப்பாம்பு ஒன்று தண்ணீரில் அடித்து வரப்பட்டு தடாகத்தில் விழுந்தது. பின்னர் வெள்ள நீரில் அடித்து வரப்பட்டு ஐ லவ் யூ குற்றாலம் என்னும் செல்பி பாயிண்ட் அருகில் பாறையில் ஒதுங்கிய நிலையில் கிடந்தது. இதனைத் தொடர்ந்து குற்றாலம் மெயினருவியில் மீட்பு பணியில் ஈடுபடுத்தப்பட்ட தீயணைப்பு வீரர் மகாராஜன் மற்றும் வனத்துறையினர் இணைந்து மலைப்பாம்பை பிடித்தனர். சுமார் 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பை பிடித்து வனத்துறை மூலம் வனப்பகுதியில் விட்டனர்.
+
Advertisement


