விகேபுரம்,நவ.21: தமிழ்நாடு பொதுநூலக இயக்கத்தின் சார்பில் ஒவ்வொரு மாவட்டத்திலும் சிறப்பாக பணிபுரியும் நூலகர்களுக்கு இந்திய நூலகத் தந்தை டாக்டர் அரங்கநாதன் விருது வழங்கும் விழா சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் பொது நூலக இயக்குநர் ஜெயந்தி தலைமையில் நடந்தது. பள்ளிக்கல்வித்துறை செயலாளர் சந்தரமோகன் வரவேற்றார். நூலக ஆணைக் குழு தலைவர் மனுஷ்ய புத்திரன் வாழ்த்திப் பேசினார். இதில் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்ற பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, நெல்லை மாவட்டம் விகேபுரம் கிளை நூலகத்தில் சீரிய நூலகப் பணியை செய்தமைக்காக கிளை நூலகர் குமாருக்கு டாக்டர் அரங்கநாதன் (நல் நூலகர்) விருதினை வழங்கிப் பாராட்டினார்.
நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன், பொது நூலக துணை இயக்குநர் தனலட்சுமி, நெல்லை மாவட்ட நூலக அலுவலர் மீனாட்சி சுந்தரம், பொது நூலகத்துறை அலுவலர் ஒன்றியத்தின் மாநில தலைவர் முத்துராமலிங்கம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். பொது நூலகத்துறை இணை இயக்குநர் இளங்கோ சந்திரகுமார் நன்றி கூறினார். விருது பெற்ற நல் நூலகர் குமாரை வாசகர் வட்ட முன்னாள் தலைவர் வல்ச குமார், தலைவர் மைதீன் பிச்சை மற்றும் பொதிகை வாசகர் வட்ட நிர்வாகிகள், உறுப்பினர்கள் பாராட்டினர்.


