களக்காடு, செப். 19: களக்காடு அருகே உள்ள மாவடி, உடையடித்தட்டு உலகளந்த நாதன் நாராயண சுவாமி கோயிலில் ஆண்டுதோறும் ஆவணி மாதம் தேரோட்டத் திருவிழா 11 நாட்கள் நடத்தப்படும். அதன்படி நடப்பாண்டு திருவிழா கடந்த 7ம்தேதி தொடங்கி நடந்து வந்தது. இதையொட்டி தினசரி அய்யா நாராயண சுவாமி பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பவனி வந்தார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான 10ம் நாளன்று தேரோட்டம் நடந்தது. இதனைதொடர்ந்து அய்யாவுக்கு சிறப்பு பள்ளியறை அலங்காரமும், விஷேச பணிவிடைகளும் நடத்தப்பட்டது. உகப்படிப்பு வாசிக்கப்பட்டது. அதன்பின் அய்யா திருத்தேருக்கு எழுந்தருளியதும் தேரோட்டம் தொடங்கியது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று அய்யா நாராயணசுவாமிக்கு சுருள் வைத்து வழிபட்டனர். விழாவை முன்னிட்டு அன்னதானம் வழங்கப்பட்டது. சிறப்பு நிகழ்ச்சியாக வாணவேடிக்கை இடம்பெற்றது.
+
Advertisement