ஏரல், நவ. 18: ஏரலில் சாலையில் சுற்றி திரியும் கால்நடைகளை பிடித்து, அதன் உரிமையாளருக்கு அபராதம் விதிக்கப்படும் என பேரூராட்சி செயல் அலுவலர் சுப்பிரமணியன் எச்சரிக்கை விடுத்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஏரல் பேரூராட்சி பகுதிகளில் இரவு, பகலாக சாலைகளில் சுற்றி திரியும் மாடு, ஆடு உள்பட கால்நடைகளால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவதுடன் அடிக்கடி சாலை விபத்துகள் நிகழ்ந்து வருகிறது. இதனால் பொதுமக்கள், வியாபாரிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே கால்நடை வளர்ப்பவர்கள், தங்களது கால்நடைகளை இனி வீட்டில் கட்டி வைத்து வளர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இதனை மீறி இனி சாலைகளில் சுற்றி திரியும் கால்நடைகளின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படுவதுடன், கால்நடைகளை பிடித்து திருச்செந்தூர் அல்லது குலசேகரப்பட்டினம் கோசாலையில் கொண்டு ஒப்படைக்கப்படும். இதற்கான செலவினையும் சம்பந்தப்பட்ட கால்நடை உரிமையாளரிடம் இருந்து வசூலிக்கப்படும்.
+
Advertisement


