நெல்லை, அக். 17: தீபாவளி பண்டிகையை ஒட்டி தெற்கு ரயில்வே பல்வேறு நகரங்களுக்கு இடையே சிறப்பு ரயில்களை இயக்கி வருகிறது. கூட்ட நெரிசலை தவிர்க்க தாம்பரம் - செங்கோட்டை இடையே இருமார்க்கத்திலும் சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. இந்த ரயிலானது (எண்.06013) தாம்பரத்தில் இருந்து இன்று 17ம்தேதி இரவு 7.30 மணிக்கு புறப்பட்டு, நாளை 18ம்தேதி காலை 7.30 மணிக்கு செங்கோட்டை சென்றடைகிறது. மறுமார்க்கத்தில் செங்கோட்டை- தாம்பரம் எக்ஸ்பிரஸ் (எண்.06014) வரும் 20ம்தேதி செங்கோட்டையில் இருந்து இரவு 8.45 மணிக்கு புறப்பட்டு, 21ம்தேதி காலை 9.45 மணிக்கு தாம்பரம் சென்றடைகிறது.
இந்த ரயில் தாம்பரத்தில் இருந்து செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், விழுப்புரம், விருதாச்சலம், அரியலூர், ரங்கம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகாசி, வில்லிபுத்தூர், ராஜபாளையம், சங்கரன்கோவில், கடையநல்லூர், தென்காசி வழியாக செங்கோட்டை சென்றடையும். இந்த ரயிலில் ஒரு ஏசி சேர்கார் பெட்டி, 14 சேர்கார் பெட்டிகள், 4 பொதுப்பெட்டிகள், 2 மாற்றுத் திறனாளிகள் பெட்டி இடம் பெற்றிருக்கும். தீபாவளிக்கு தென்மாவட்டங்களுக்கு வந்து செல்லவும், தீபாவளி முடிந்து சென்னை செல்லவும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ள சேர்கார் ரயிலால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.