ஆலங்குளம், செப். 17: ஆலங்குளம் பகுதியில் சூரியனை சுற்றி நேற்று வானவில் போன்ற அதிசய ஒளிவட்டம் தோன்றியதை பொதுமக்கள் மாணவ, மாணவிகள் ஆச்சரியமுடன் கண்டு ரசித்தனர். தென்காசி மாவட்டம் ஆலங்குளம் உள்பட பல்வேறு பகுதிகளில் நேற்று காலை 11.20 மணி முதல் 11.30 மணி வரை சூரியனை சுற்றி வானவில் போன்ற ஒளிவட்டம் தோன்றியது. இதை பொதுமக்கள் தங்களது செல்போனில் படம் பிடித்தனர். தகவலறிந்த பள்ளி ஆசிரியர்கள், தங்களது வகுப்பு மாணவர்களை அழைத்து காண்பித்தனர். நீர் திவளைகள் மற்றும் பனி துகள்கள் ஒரே பகுதியில் சேரும்போது வளிமண்டலம் வழியாக சூரிய ஒளியை சிதறடித்து இந்த காட்சிகள் தோன்றும் என அறிவியல் ஆர்வலர்கள் கூறுகின்றனர். வானில் சுமார் 10 நிமிடங்கள் மட்டுமே சூரியனை சுற்றி இந்த ஒளி வட்டத்தை காண முடிந்தது. இந்த நிகழ்வு பொதுவாக மழை மேகங்கள் சூழ்ந்திருக்கும்போது அல்லது காற்றில் ஈரப்பதம் அதிகமாக இருக்கும் காலங்களில் காணப்படும். அனைவரும் காண முடியாத ஒரு அரிய வானியல் நிகழ்வாக இச்சம்பவம் பேசப்படுகிறது.
+
Advertisement