தென்காசி, அக். 14: தென்காசி கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர்க்கும் கூட்டத்திற்கு மனு கொடுக்க வந்த ஆய்க்குடியைச் சேர்ந்த முதியவர் தனக்கு சொந்தமான இடத்தை தனிநபர் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்டுத்தர வலியுறுத்தி உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. தென்காசி அடுத்த ஆய்க்குடியை சேர்ந்தவர் முனியாண்டி (60). தென்காசி கலெக்டர் அலுவலகத்திற்கு நேற்று நடந்த குறை தீர்க்கும் கூட்டத்திற்கு வருகைதந்த இவர், ஆய்க்குடியில் உள்ள தனக்கு சொந்தமான நிலத்தை தனி நபர் ஆக்கிரமித்துள்ள நிலையில் அதை மீட்டுத்தர பலமுறை மனுக்கள் கொடுத்தும் நடவடிக்கை இல்லை என்று கூறி கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் பகுதியில் இருந்து ரயில் நகர் செல்லும் சாலையோரம் நின்று உடலில் மண்ணெண்ணையை ஊற்றிக் கொண்டு தற்கொலைக்கு முயன்றார். இதைப் பார்த்து உஷாரான போலீசார் உடனடியாக தண்ணீரை ஊற்றி அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு நிலவியது.
+
Advertisement