களக்காடு,செப்.14: களக்காடு அருகே தம்பிதோப்பை சேர்ந்தவர் ஜெயராமன் மகன் ரிகாஷ் (25). களக்காட்டில் இ-சேவை மையம் வைத்துள்ளார். இவரும், களக்காடு அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த பெண்ணும் காதலித்து வருகின்றனர். 2 மாதங்களில் இருவருக்கும் திருமணம் செய்து வைக்க இரு வீட்டாரின் பெரியவர்கள் பேசி முடிவு செய்துள்ளனர். இந்நிலையில் ரிகாஷ் காதலியின் ஊரிலுள்ள அம்மன் கோயில் கொடை விழாவிற்கு நண்பரான காமராஜ் மகன் சதீஸ்குமாருடன் பைக்கில் சென்றார். விழா முடிந்ததும் ரிகாஷ் வீடு திரும்ப பைக்கை எடுக்க சென்றபோது அங்கு வந்த சாலைப்புதூரை சேர்ந்த அரிகோலன் மகன் வாசு, கிருஷ்ணன் மகன் ராஜலிங்கம், நாராயணன் மகன் சேர்மபாண்டி, பொன்லிங்கம் மகன் ரிதன் ஆகியோர் தகராறு செய்தனர். தகராறு முற்றியதால் ஆத்திரமடைந்த வாசு உள்பட 4 பேரும் சேர்ந்து ரிகாஷை தாக்கினர். அதனை தடுக்க வந்த அவரது நண்பர் சதிஸ்குமாரையும் அடித்து உதைத்தனர். மேலும் அவர்கள் சென்ற பைக்கை இரும்பு கம்பியால் அடித்து நொறுக்கி சேதப்படுத்தினர். இதுகுறித்த புகாரின் பேரில் களக்காடு போலீசார் வழக்கு பதிவு செய்து வாசு உள்பட 4 பேரை தேடி வருகின்றனர்.
+
Advertisement