கடையம்,நவ.13: தென்காசி மாவட்டம் கீழ கடையம் பவுண்டி தெருவை சேர்ந்த சூசைரத்தினம் மகன் ராஜ்குமார் (57). இவருக்கும், கீழ மாதாபுரத்தை சேர்ந்த அவரது அண்ணன் ராமராஜ் (66) என்பவருக்கும் கீழ கடையம் வடக்கு உடையார் பிள்ளையார் கோயில் அருகேயுள்ள வீட்டை பங்கு பிரிப்பதில் பிரச்னை இருந்து வருகிறது. இந்நிலையில் நேற்று ராஜ்குமார், அவரது மகன் சூர்யா பிரச்னைக்குரிய வீட்டில் நின்று கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த ராமராஜ் மகன் வெஸ்லி (39), இருவருடன் தகராறில் ஈடுபட்டார். அப்போது மறைத்து வைத்திருந்த அரிவாளால் இருவரையும் வெட்டி விட்டு அங்கிருந்து பைக்கில் தப்பியோடினார்.
இதில் படுகாயமடைந்த இருவரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கடையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்கை்கு பிறகு மேல் சிகிச்சைக்காக தென்காசி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் கடையம் போலீசார் வழக்கு பதிவு செய்து ராமராஜ் (66), அவரது மனைவி மஞ்சுளா (59), மகன் வெஸ்லி (39) ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்தனர். தொடர்ந்து ராமராஜ், வெஸ்லியை போலீசார் கைது செய்தனர். இதில் ராமராஜ் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் என்பது குறிப்பிடத்தக்கது.
