அம்பை,செப்.11:
மணிமுத்தாறு பகுதியில் திடீரென பெய்த மழையால் அறுவடை செய்த நெற்பயிர்கள் சேதமடைந்தது. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். நெல்லை மாவட்டம் மணிமுத்தாறு அதன் சுற்றுவட்டார பகுதிகளான அயன் சிங்கம்பட்டி, ஜமீன் சிங்கம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் கார் சாகுபடிக்காக நெற்பயிர்கள் பயிர் செய்யப்பட்டது. கடந்த சில நாட்களுக்கு முன்பு அறுவடை செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை மணிமுத்தாறு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் திடீரென மழை பெய்தது. இதனால் நெல் அறுவடை பணிகள் முழுமையாக பாதிக்கப்பட்டது. மேலும் ஏற்கனவே அறுவடை செய்யப்பட்டு வயல்களில் வைக்கப்பட்டிருந்த நெல் மூடைகளும் மழையில் நனைந்து சேதமானது.
இதனால் லட்சக்கணக்கில் இழப்பு ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். பாதிக்கப்பட்ட பகுதிகளில் வருவாய்த்துறையினர், வேளாண்மை துறையினர் நேரில் ஆய்வு செய்து உரிய இழப்பீடு பெற்று தர வேண்டும் என்று விவசாயிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து விவசாயிகள் கூறுகையில், ‘கடந்த சில நாட்களாக நெல் அறுவை செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. அறுவடை செய்யும் நேரத்தில் திடீரென மழை பெய்ததால் நெற்பயிர்கள் சாய்ந்து அறுவடை பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. அறுவடை செய்து விற்பனைக்கு கொண்டு வந்த நெல்மூட்டைகள் நனைந்து சேதமாகியுள்ளது. இதனால் எங்களுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. கடன் வாங்கி தான் சாகுபடி பணியை தொடங்கினோம். லாபம் ஈட்டி விடலாம் என்று நினைத்து கொண்டிருக்கையில் திடீரென பெய்த மழை எங்களது வாழ்க்கையை புரட்டி போட்டு விட்டது. பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு தர வேண்டும்’ என்றனர்.