மது அருந்தும் போது அவதூறாக பேசியதால் தகராறு தொழிலாளியை கத்தியால் குத்திய 3 சிறுவர்கள் உள்பட 5 பேர் கைது
திருவேங்கடம்,செப்.11: சங்கரன்கோவில் அருகே தொழிலாளியை கத்தியால் குத்திய 3 சிறுவர்கள் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர். குருவிகுளம் அருகேயுள்ள ராமநாதபுரம் பொதிகை நகரை சேர்ந்த மாரியப்பன் மகன் பாலசுப்பிரமணியன் (24). கூலி வேலை செய்து வரும் இவருக்கு திருமணமாகவில்லை. இந்நிலையில் அவர் கடந்த 4 நாட்களுக்கு முன்பு ஊருக்கு ஒதுக்குபுறத்தில் தனது நண்பர்களுடன் மது அருந்தி கொண்டிருந்தனர். அப்போது அவர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டதில் பாலசுப்ரமணியனை அவர்கள் அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் பாலசுப்பிரமணியன் தனது தம்பி கதிர்வேலை அழைத்து கொண்டு சம்பவ இடத்திற்கு சென்றுள்ளனர். அங்கு நின்று கொண்டிருந்த அவரது நண்பர்கள் 7 பேருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதில் ஆத்திரமடைந்த அதே பகுதியைச் சேர்ந்த நண்பர்கள் ஆனந்த், மனோ உள்பட 7 பேர் சேர்ந்து பாலசுப்பிரமணியன், கதிர்வலை சரமாரியாக தாக்கினர். அப்போது ஆனந்த் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் பாலசுப்பிரமணியனை குத்தினார். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார். இதையடுத்து அவர்கள் அங்கிருந்து தப்பியோடி விட்டனர்.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் படுகாயமடைந்த பாலசுப்பிரமணியன், கதிர்வேல் ஆகியோரை மீட்டு சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு பாலசுப்பிரமணியனுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பிறகு மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். கதிர்வேலுக்கு சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்த புகாரின் பேரில் குருவிகுளம் சப்-இன்ஸ்பெக்டர் வேல்முருகன் வழக்கு பதிவு செய்து தப்பியோடிய 3 சிறுவர்கள் உள்பட 5 பேரை கைது செய்தனர். இதில் ஆனந்த், மனோ சங்கரன்கோவில் கிளை சிறையில் அடைக்கப்பட்டனர். 3 சிறுவர்கள் நெல்லை கூர்நோக்கு சிறுவர் மையத்தில் அடைக்கப்பட்டனர்.