கடையம், ஆக.8: கடையம் அருகே நாய்கள் துரத்தியதால் பதறி ஓடி ஊருக்குள் புகுந்த மிளாவை வனத்துறையினர் பத்திரமாக மீட்டனர். கடையம் அருகே மீனாட்சிபுரம் பகுதியில் முள்ளிமலை பொத்தை உள்ளது. இந்த பொத்தையில் கரடி, காட்டுப்பன்றி, மிளா உள்ளிட்ட வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இந்த வனவிலங்குகள் அவ்வப்போது பொத்தையை விட்டு வெளியேறி அருகிலுள்ள தோட்டம் மற்றும் விளைநிலங்களுக்கு சென்று உணவு தேடி வருகிறது. இந்நிலையில் நேற்று பொத்தையிலிருந்து வெளியேறி ரவணசமுத்திரம் பகுதியில் ஆற்றங்கரையோரத்தில் மிளா ஒன்றை நாய் துரத்தி சென்றது. அப்போது நாய்களிடம் இருந்து தப்பித்து ஊருக்குள் மிளா சென்று பதுங்கி இருந்தது. அங்கிருந்து நாய்கள் துரத்தியதால் ஆற்று நீரில் மிளா தஞ்சமடைந்தது. இதையடுத்து கடையம் வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. கடையம் வனச்சரக அலுவலர் கருணா மூர்த்தி உத்தரவின்படி வனத்துறை வேட்டை தடுப்பு காவலர் வேல்ராஜ் மற்றும் வனத்துறையினர் நாய்களை அங்கிருந்து விரட்டி மிளாவை உயிருடன் மீட்டு முள்ளிமலை பொத்தை பகுதியில் பத்திரமாக கொண்டு சென்றுவிட்டனர்.
+
Advertisement