களக்காடு,நவ.6: மூலைக்கரைப்பட்டி அருகே பணத்தகராறில் சமையல் மாஸ்டரை தாக்கிய விவசாயியை போலீசார் தேடி வருகின்றனர். மூலைக்கரைப்பட்டி அருகேயுள்ள தெய்வநாயகபேரி வடக்குத்தெருவை சேர்ந்தவர் செல்லையா மகன் சரவணன் (21). சமையல் மாஸ்டராக உள்ளார். இவரது பாட்டி காசி குலுக்கல் சீட்டு நடத்தி வருகிறார். அவரிடம் அதே ஊரைச் சேர்ந்த கந்தசாமி மகன் ஆறுமுகத்துரையும், அவரது தம்பி விவசாயி இளையராஜாவும் சீட்டு போட்டுள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆறுமுகத்துரை, சரவணனிடம் சீட்டு பணம் ரூ.3 ஆயிரத்தை கொடுத்து அவரது பாட்டியிடம் கொடுக்குமாறு கூறியுள்ளார். ஆனால் அந்த பணத்தை சரவணன் பாட்டி காசியிடம் கொடுக்காமல், செலவு செய்து விட்டார்.
இதுதொடர்பாக சரவணனுக்கும், ஆறுமுகத்துரை, அவரது தம்பி இளையராஜாவுக்கிடையே தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் சம்பவத்தன்று சரவணன் தனது பாட்டி வீட்டில் இருக்கும் போது அங்கு வந்த இளையராஜாவுக்கும், அவருக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த இளையராஜா, அவரை மண் வெட்டியால் சரமாரியாக தாக்கினார். இதனால் படுகாயமடைந்த சரவணனை அக்கம், பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக முனைஞ்சிபட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதித்தனர். இதுகுறித்து மூலைக்கரைப்பட்டி போலீசார் இளையராஜா மீது வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.
