களக்காடு, நவ. 6: களக்காட்டில் செல்போனில் பேசியதை கணவர் கண்டித்ததால் இளம்பெண் தனது 2 குழந்தைகளுடன் மாயமானார். நெல்லை மாவட்டம் களக்காடு பாரதிபுரம், கீழத்தெருவைச் சேர்ந்த பரமசிவன் மகன் மந்திரமூர்த்தி (32). இவர் நாகர்கோவிலில் உள்ள ஒரு ஓட்டலில் புரோட்டா மாஸ்டராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு திருமணமாகி மகாதேவி (25) என்ற மனைவியும், 4 வயதில் ஒரு பெண் குழந்தையும், 2 வயதில் ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர். இந்நிலையில் மகாதேவி அடிக்கடி செல்போனில் பேசியுள்ளார். இதை மந்திரமூர்த்தி கண்டித்தார். இதனால் அவர்களுக்குள் கடந்த 1ம் தேதி தகராறு ஏற்பட்டது. பின்னர் மந்திரமூர்த்தி வெளியே சென்று விட்டார். சிறிது நேரத்திற்கு பிறகு அவர் வீட்டிற்கு வந்து பார்த்த போது, வீட்டில் இருந்த மனைவி மகாதேவி மற்றும் இரு குழந்தைகளையும் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் அவர் தனது உறவினர்கள் வீடு உள்பட பல்வேறு இடங்களில் தேடியும் அவர்கள் கிடைக்கவில்லை. இதுகுறித்த புகாரின் பேரில் களக்காடு போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான மகாதேவி, அவரது குழந்தைகளை தேடி வருகின்றனர்.
+
Advertisement
