கேடிசி நகர், நவ.5: நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் தெருநாய்கள் அட்டகாசத்தால் பயணிகள் பீதியடைந்த நிலையில் இதுபோன்ற சம்பவங்கள் இனி நேராமல் தடுக்க தக்க நடவடிக்கை எடுக்கப்படுமா? என சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட அனைத்துத்தரப்பினரும் எதிர்பார்க்கின்றனர். நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்திற்கு தினமும் ஆயிரக்கணக்கில் வரும் பயணிகள் வெளியூர்களுக்கும், வெளிமாநிலங்களுக்கும் ரயிலில் பயணிக்கின்றனர். அத்துடன் அகில இந்திய அளவில் அதிக வருமானம் ஈட்டும் ரயில் நிலையங்களில் நெல்லை ரயில் நிலையமும் ஒன்றாகத் திகழ்கிறது. இருப்பினும் இந்த ரயில் நிலையத்தில் போதுமான வசதிகள் இல்லை. ரயில் நிலையத்தில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த ராபர்ட்புரூஸ் எம்பி, ஒன்றிய அரசை வலியுறுத்தி வருகிறார். தற்போது சில பணிகளுக்கு நிதி ஒதுக்கப்பட்டும், பணிகள் துவங்கப்படவில்லை. இந்நிலையில் இந்த ரயில் நிலையத்தில் நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது.
ஒவ்வொரு நடைமேடையிலும் 10 முதல் 20க்கும் மேற்பட்ட நாய்கள் கூட்டம், கூட்டமாக அலைந்து திரிவதால் பயணிகள் ஒரு வித அச்சத்துடனேயே நடமாட வேண்டிய நிலை உள்ளது. பயணிகள் தங்களது சுமைகளுடன் ரயில் நிலையத்திற்கு வரும் போது சில நேரங்களில் நாய்கள் விரட்டுகின்றன. இதனால் நாய்கள் கடித்து விடுமோ என்று உயிருக்கு பயந்து பயணிகள் ஓடும் போது, ரயில் வந்த நிலையில் நடைமேடைக்கு கீழே விழுந்து உயிரிழக்கும் அபா்யங்கள் உள்ளன. நாய்களுக்கு பயந்து ஓடும் சிறுவர்களை பின்னாலேயே விரட்டிச் செல்வதால் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை பயத்தால் அலறுகின்றனர். நேற்று காலை ரயில் நிலைய நடைமேடையில் ஏராளமான தெருநாய்கள் சுற்றி திரிந்ததால் பயணிகள் ரயிலில் ஏறவே பீதியில் உறைந்து அச்சப்பட்டனர். எனவே, இதுவிஷயத்தில் சம்பந்தப்பட்ட ரயில்வே நிர்வாகத்தினர் தீவிர நடவடிக்கை எடுத்து ரயில் நிலையத்தில் திரியும் தெரு நாய்களை அப்புறப்படுத்த முன்வர வேண்டும் என சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட அனைத்துத்தரப்பினரும் எதிர்பார்க்கின்றனர்.
