கடைகளில் திடீர் சோதனை கடையம்,டிச.15: தரமற்ற உணவுகள் விற்கப்படுவதாக பக்தர்கள் தெரிவித்த புகாரை அடுத்து கடையம் அருகே தோரணமலை முருகன் கோயில் அடிவாரப் பகுதி கடைகளில் அதிரடியாக சோதனை நடத்திய உணவு பாதுகாப்பு அதிகாரிகள் தடை செய்யப்பட்ட கலப்பட பொருட்களை கண்டறிந்து பறிமுதல் செய்து உடனடியாக அழித்தனர்.
தென்காசி மாவட்டம், கடையம் அருகே மிகவும் பழமைவாய்ந்த தோரணமலை முருகன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலுக்கு தென்காசி மாவட்டம் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து தரிசனம் செய்து ெசல்கின்றனர். இவ்வாறு வரும் பக்தர்களுக்கு மலையடிவாரப் பகுதியில் உள்ள சில கடைகளில் சுகாதாரமற்ற முறையில் உணவுப் பொருட்கள் விற்கப்படுவதாகக் கூறப்படுகிறது.
அத்துடன் அவற்றை வாங்கி உட்கொள்ளும் பக்தர்களுக்கு உடல் உபாதைகள் ஏற்படுவதாகவும் புகார் எழுந்தது. சமீபத்தில் இங்கு விற்கும் உணவுப் பொருட்களை சாப்பிட்ட பக்தர்கள் சிலருக்கு திடீரென உடல்நலக்குறை ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் தரமற்ற உணவு பொருட்கள் விற்பனை தொடர்பாக உணவுப் பாதுகாப்புத்துறையினருக்கு புகார் வந்தது.
இதைதொடர்ந்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் நேற்று தோரணமலையடிவார பகுதியில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். இதில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த தடை செய்யப்பட்ட செயற்கை வண்ணங்கள் கலந்த 1.8 கி.கி. காலி பிளவர் 500 கிராம் உருளைக்கிழங்கு, 3.8 கி.கி. மிக்சர் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டன. மேலும் உரிய உணவுப் பாதுகாப்புத்துறை அனுமதி இல்லாத கடைகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.


