சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோயிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழாவில் கோமதிஅம்மன் கிளி வாகனத்தில் வீதி உலா
சங்கரன்கோவில், நவ.15: சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோயில் ஐப்பசி திருக்கல்யாண விழாவில் கோமதி அம்பாள் கிளி வாகனத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோயில் தென் தமிழகத்தின் மிகவும் புகழ்பெற்ற சிவஸ்தலங்களில் ஒன்று. இக்கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி திருக்கல்யாணம் தொடர்ந்து 12 நாட்கள் நடைபெறுவது வழக்கம். விழா நாட்களில் அம்பாள் பல்வேறு வாகனங்களில் காலை, மாலை இரு வேலைகளிலும் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறும். இந்த ஆண்டுக்கான ஐப்பசி திருக்கல்யாணம் திருவிழா கடந்த நவம்பர் 5ம் தேதி அம்பாள் சன்னதி முன்பு அமைந்துள்ள தங்க கொடிமரத்தில் கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழா நாட்களில் கோமதி அம்மன் வெவ்வேறு வாகனங்களில் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஐப்பசி திருக்கல்யாணம் 9ம் நாள் திருநாளான நேற்று முன்தினம் இரவு கோமதி அம்மன் வருடத்திற்கு ஒரு முறை வரும் கிளி வாகனத்தில் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். முக்கிய நிகழ்ச்சியான ஐப்பசி திருக்கல்யாணம் 11ம் நாளான இன்று (நவம்பர் 15ம் தேதி) நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அம்பாள் காலை 11.30 மணிக்கு மேல் 12.00 மணிக்குள் கீழ ரத வீதியில் உள்ள மண்டகப்படியில் எழுந்தருளும் நிகழ்ச்சியும், அதனைத்தொடர்ந்து மண்டகப்படியில் வைத்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் தீபாரதனைகள் நடைபெறுகிறது. அதனைத்தொடர்ந்து மாலை 5.30 மணிக்கு மேல் 6 மணிக்குள் கோமதி அம்பாளுக்கு, ஸ்ரீ சங்கரலிங்க சுவாமி வெள்ளி ரிஷப வாகனத்தில் கீழரதவீதி தேர் நிலையம் அருகே காட்சி கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
தொடர்ந்து இரவு9.30 மணிக்கு மேல் 10 மணிக்குள் கோயிலில் வைத்து சுவாமி அம்பாள் திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடைபெறுகிறது. நாளை (ஞாயிற்றுக்கிழமை) சுவாமி, அம்பாள் பட்டணபிரவேசம் நிகழ்ச்சி நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் மற்றும் மண்டகபடிதாரர்கள் செய்து வருகின்றனர்.
