Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கார் மோதி வாலிபர் இறந்த வழக்கு பெரம்பலூர் டிரைவருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை

திருச்சி, ஜூலை 25: கார் மோதி வாலிபர் இறந்தது தொடர்பான வழக்கில் பெரம்பலூர் டிரைவருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை வழங்கி திருச்சி மாஜிஸ்திரேட் கோர்ட் நேற்று தீர்ப்பளித்தது. திருச்சி மாவட்டம் இனாம் சமயபுரத்தை சேர்ந்தவர் கார்த்திக் (25). இவர் கடந்த 9.9.18 அன்று தன் தம்பி அஜய் (21) என்பவருடன் டீ குடிப்பதற்காக திருச்சி -சென்னை பைபாஸ் சாலையில் சமயபுரம் டோல்கேட் அருகே சாலை ஓரமாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது சாலையில் அதிவேகமாக வந்த கார் ஒன்று அவர்கள் மீது மோதியது. இதில் அஜய்க்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி இறந்தார்.

இதுகுறித்து சமயபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். காரை அதிவேகமாக ஓட்டி வந்து விபத்தை ஏற்படுத்தியதாக பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா செட்டிகுளம் சன்னதி வீதியை சேர்ந்த ஜோதி கண்ணன் (34) என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதுகுறித்த வழக்கு திருச்சி மாஜிஸ்திரேட் கோர்ட் எண். 3ல் நடந்து வந்தது. இந்நிலையில் வழக்கின் இறுதி விசாரணை முடிவடைந்து நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது. அதில், குற்றவாளி ஜோதி கண்ணனுக்கு இரு வெவ்வேறு பிரிவுகளின் கீழ் ஆறு மாதம் மற்றும் இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.6000 அபராதமும் விதித்த நீதிபதி முகமது சுகில், குற்றவாளி தண்டனைகளை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என தீர்ப்பளித்தார். அரசு தரப்பில் அரசு உதவி வக்கீல் பாஸ்கர் ஆஜரானார்.