Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி எம்பி துரை வைகோ கலெக்டருடன் நேரில் சந்திப்பு

திருச்சி, ஜூலை 26: திருச்சி எம்பி துரை வைகோ, நேற்று காலை திருச்சி மாவட்ட கலெக்டர் சரவணனை நேரில் சந்தித்து, தன் தொகுதி மக்களின் முக்கிய நான்கு கோரிக்கைகள் குறித்து விளக்கிக் கூறினார். திருச்சி எம்பி துரை வைகோ நேற்று காலை திருச்சி மாவட்ட கலெக்டர் சரவணனை கலெக்டர் அலுவலகத்தில் சந்தித்து பேசினார். அப்போது தன் தொகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கைகளான பால்பண்ணை-துவாக்குடி சர்வீஸ் சாலை பணி, ரங்கம் சட்டமன்ற தொகுதியில் பொதுமக்களுக்கு இடையூறாக அமையவுள்ள டாஸ்மாக் கடை அமைக்க வேண்டாம் என்ற கோரிக்கை மற்றும் எழில் நகரில் சாலை அமைப்பது ஆகியன குறித்து பேசினார்.

கலெக்டரிடம் அவர் விடுத்த கோரிக்கைகளாவன:முதலாவதாக திருச்சி பால்பண்ணை- துவாக்குடி வரையிலான அணுகு சாலை (Service Road) அமைப்பதற்கான முன்னேற்பாட்டு பணியில் கையகப்படுத்தப்படும் நிலங்களுக்கு இழப்பீடு வழங்குவதற்கும், அதிலுள்ள கட்டிடங்களை இடிப்பதற்கு தேவைப்படும் நிதியின் விவரங்களை விரைந்து வழங்க வேண்டும். அவ்வாறு வழங்கப்பட்டால் ஒன்றிய அரசிடம் அதை கேட்டுப்பெறும் பணிகளை மேற்கொள்ள உதவியாய் இருக்கும். எழில் நகரில் சாலை அமைத்துத் தர வேண்டும். ரங்கம் சட்டமன்ற தொகுதி அல்லித்துறை ஊராட்சியிலுள்ள குடியிருப்பு பகுதிகள், பள்ளிகள், வழிபாட்டுத்தலங்களுக்கு மத்தியில் அமைய இருக்கும் டாஸ்மாக் மதுபான கடையை அமைக்க வேண்டாம் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய கடிதத்தை மாவட்ட கலெக்டர் சரவணனிடம், எம்பி துரை வைகோ வழங்கினார். கடிதத்தை பெற்றுக்கொண்ட கலெக்டர், அனைத்து கோரிக்கைகள் குறித்தும் உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்ததாக எம்பி துரை வைகோ தெரிவித்துள்ளார்.இச்சந்திப்பின் போது, பால்பண்ணை-துவாக்குடி அணுகு சாலை மீட்பு கூட்டமைப்பினர், மதிமுக துணை பொதுச்செயலாளர் டாக்டர் ரொஹையா, மாவட்டச் செயலாளர்கள் வெல்லமண்டி சோமு, மணவை தமிழ்மாணிக்கம், சேரன் மற்றும் திமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.