திருச்சி, ஜூலை 24: திருச்சி மலைக்கோட்டை மட்டுவார் குழலம்மை, தாயுமான சுவாமி கோயில் ஆடி பூரம் திருவிழாவின் 5ம் திருநாளான நேற்று காலை அம்மன் கேடயத்திலும், மாலையில் ரிஷப வாகனத்திலும் எழுந்தருளினார். திருச்சி மலைக்கோட்டை மட்டுவார்குழலம்மை, தாயுமான சுவாமி கோயில் ஆடிபூரம் விழா நடைபெற்று வருகிறது. விழாவின் 5ம் திருநாளான 23ம் தேதி காலை அம்மன் கேடயத்திலும், மாலை ரிஷப வாகனத்திலும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் சாதித்தார்.
6ம் திருநாளான 24ம் ேததி காலை கேடயத்திலும், மாலை உள்ளே உள்ள குளத்தில் தீர்த்தவாரியும், மாலை பஞ்சமூர்த்தி வாகனத்தில் புறப்பாடு மற்றும் திரிபுரசுந்தரி அம்பாள் சிம்ம வாகனத்தில் புறப்பாடு, 7ம் திருநாளான 25ம் தேதி அம்மன் காலை கேடயத்திலும், மாலை கிளி வாகனத்திலும், 8ம் திருநாளான 26ம் தேதி காலை கேடயத்திலும், மாலை குதிரை வாகனத்திலும், 9ம் திருநாளான 27ம் தேதி காலை கேடயத்திலும் மாலை விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆடித்தேர் நிகழ்ச்சியும், விழாவின் நிறைவாக 28ம் தேதி காலை தீர்த்வாரியும், மாலை அம்பாள் ரிஷப வாகனத்தில் வீதியுலா, மாணிக்க விநாயகர் தேய்பிறை சதுர்த்தி புறப்பாடு, இரவு அம்மன் சன்னிதியில் பூரம் தொழுதல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
நிறைவு நாள் தவிர்த்து மற்ற நாட்களில் தினமும் விநாயகர் மூஷிக வாகனத்தில் எழுந்தருளிகிறார். விழா ஏற்பாடுகளை கோயில் உதவி ஆணையர் உமா லட்சுமணன், பேஸ்கர் மற்றும் கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.