Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

லால்குடி அருகே மேலரசூர் கிராமத்தில் ஜல்லிக்கட்டில் நின்று விளையாடிய 730 காளைகள்

லால்குடி, மே. 12: லால்குடி அருகே மேலரசூர் கிராமத்தில் ஜல்லிகட்டு போட்டி நடைபெற்றது. ஜல்லிகட்டு போட்டியில் 730 காளைகளும் 249 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றனர்.காளையை அடக்க முயன்ற ஜல்லிக்கட்டு வீரர் பலியானார். திருச்சி மாவட்டம் புள்ளம்பாடி ஒன்றியம் ஊராட்சி மேலரசூர் கிராமத்தில் நேற்று கல்லக்குடி-மால்வாய் சாலையின் கிழக்கு பகுதியில் மேடை அமைத்து மாரியம்மன்,செல்லியம்மன், காளியம்மன் கோயில்களில் சாமி கும்பிட்டுகோயில் மாடுகளை ஊர்வலமாக கொண்டு வந்து ஜல்லிகட்டு போட்டி தொடங்கியது. ஜல்லிக்கட்டு சிறப்பு விருந்தினர்கள் மற்றும் பார்வையாளர்கள் அனைவருக்கும் நிழல் குடை அமைக்கப்பட்டிருந்தது. காலை 8.25 மணிக்கு தொடங்கிய ஜல்லிகட்டு மாலை 4.30 மணி வரை விறுவிறுப்பாக நடைபெற்றது.

ஜல்லிக்கட்டு போட்டியில் லால்குடி டிஎஸ்பி தினேஷ்குமார், புள்ளம்பாடி மண்டல துணை வட்டாட்சியர் லோபோ மற்றும் ஜல்லிக்கட்டு கமிட்டி உறுப்பினர்கள் முன்னிலையில் லால்குடி தாசில்தார் முருகன் தலைமையில் ஜல்லிக்கட்டு உறுதிமொழி எடுத்துக்கொண்டு பின்னர் போட்டி தொடங்கியது.

இதில் திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், கரூர், மதுரை, சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்ட அளவில் கொண்டு வரப்பட்ட காளைகள் மற்றும் உள்ளூரைச் சேர்ந்த காளைகள் என 730 அவிழ்த்து விடப்பட்டன. மேலும் காளைகளை அடக்க 249 வீரர்கள் 6 குழுக்களாக பிரிக்கப்பட்டு வெள்ளை, மஞ்சள், ஊதா, ஆரஞ்சு, ரோஸ், சிவப்பு கலரில் பனியன்கள் அணிந்து ஜல்லிகட்டில் கலந்துகொண்டு காளைகளை பிடித்தனர்.

விறுவிறுவென நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் மாடுபிடி வீரர்கள் பிடிக்கும் காளைகள் திமிறிக்கொண்டு சீறிப்பாய்ந்து சென்றன. ஒரு சில மாடுகளை மாடுபிடி வீரர்கள் திமிலை பிடித்து அடக்கினர். தொடர்ந்து ஜல்லிகட்டு விழாவில் பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும், காளைகளை அடக்கிய வீரர்களுக்கும் சில்வர் அண்டாக்கள், டேபிள்கள், டிரஸ்சிங்டேபிள்கள், மின்விசிறிகள், ரொக்கதொகைகள் என 13 லட்சம் மதிப்பில் ஏராளமான பரிசுகள் வழங்கப்பட்டது.

ஜல்லிக்கட்டு போட்டியில் 37 மாடுபிடி வீரர்கள் காயமடைந்தனர். இதில் 2 பேர் மேல் சிகிச்சைக்கு அனுப்பப்பட்டனர். அதில் ஒருவர் கீழே குளத்தூரை சேர்ந்த ராகேஷ் (20) மாடு பிடிக்கும்போது மாடு மோதியதில் நெஞ்சில் பலத்த அடிபட்டு மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டார். அங்கு மருத்துவமனையில் மருத்துவர்கள் பரிசோதனை செய்தபோது, அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியதையடுத்து அரியலூர் அரசு மருத்துவமனையில் உடற்பரிசோதனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விழாவிற்கான ஏற்பாடுகளை மேலரசூர் முக்கியஸ்தர்கள் மற்றும் ஜல்லிகட்டு பேரவையினர் செய்திருந்தனர்.