ஒடுகத்தூர், டிச.2: ஒடுகத்தூர் அருகே கோயிலில் உண்டியல் உடைத்து அதிலிருந்த காணிக்கையை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். ஒடுகத்தூர் அடுத்த பெரிய ஏரியூர் கிராமத்தில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு பிரசித்தி பெற்ற பெருமாள் கோயில் உள்ளது. இதனால், வாரம் தோறும் சனிக்கிழமைகளில் சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடந்து வருகிறது. அதேபோல், வாரம் தோறும் நடக்கும் சிறப்பு பூஜைகளில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை இரவு மர்ம நபர்கள் சிலர் கோயிலில் வைக்கப்பட்டிருந்த உண்டியலை உடைத்து அதிலிருந்த காணிக்கையை திருடிச் சென்றுள்ளனர்.
இந்த நிலையில், நேற்று முன்தினம் சனிக்கிழமை என்பதால் வழக்கம்போல் கோயில் பூசாரி மற்றும் நிர்வாகிகள் கோயிலுக்கு வந்துள்ளனர். அப்போது, கோயில் உண்டியல் உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர். இது தொடர்பாக வேப்பங்குப்பம் போலீசுக்கு தகவல் கொடுத்துள்ளனர். அதன்பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இன்ஸ்பெக்டர் புனிதா தலைமையிலான போலீசார் அங்கு ஆய்வு மேற்கொண்டனர். இதுகுறித்து வழக்குப்பதிந்து கோயில் உண்டியல் உடைத்து காணிக்கை திருடிய மர்ம நபர்களை வலை வீசி தேடி வருகின்றனர்.


