விளாத்திகுளம், அக்.30: விளாத்திகுளம் சுற்றுவட்டார கிராம மக்களின் அடிப்படை தேவைகளை மார்க்கண்டேயன் எம்எல்ஏ கேட்டறிந்தார். வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் விளாத்திகுளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இதனை தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் வரத்து பாதை சீரமைத்தல், புதிய பாலம் அமைத்தல் உள்ளிட்ட பணிகளை திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் மார்க்கண்டேயன் எம்எல்ஏ நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து வருகிறார்.
இந்நிலையில் விளாத்திகுளத்தில் உள்ள தனது அலுவலகத்தில் விளாத்திகுளம் சுற்றுவட்டார பகுதி கிராமங்களில் இருந்து வந்திருந்த பொதுமக்களை சந்தித்து தங்கள் பகுதியில் நிறைவேற்றப்பட வேண்டிய அடிப்படை தேவைகள் குறித்து கேட்டறிந்து மனுக்களை பெற்றுக் கொண்டார். தொடர்ந்து பருவமழை காலங்களில் அதிகமாக மழை பெய்யும் நேரங்களில் வெளியே செல்ல வேண்டாம், சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் அதிகமான நீர் உள்ள கண்மாய் உள்ளிட்ட நீர்நிலைகளுக்கு தனியே செல்ல வேண்டாம் என்றும், பருவமழை தொடர்பாக தன்னை எப்போது வேண்டுமானாலும் தொடர்பு கொள்ளலாம் எனவும் கேட்டுக் கொண்டார்.
