தூத்துக்குடி,செப்.30: கயத்தாறு அருகே முடுக்கலான்குளத்தில் ஊரணியை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கலெக்டரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். கயத்தாறு வட்டம் முடுக்கலான்குளம் கிராமத்தை சேர்ந்த மக்கள் ஊர் நாட்டாமை முத்துப்பாண்டி தலைமையில் மாவட்ட கலெக்டரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: முடுக்கலான்குளம் கிராமத்தில் 0.83 ஹெக்டேர் நிலத்தில் அமைந்துள்ள வண்டிப்பாதை, வாய்க்கால் மற்றும் அதில் அமைக்கப்பட்ட ஊரணி ஆகியவை தனிநபர் பெயருக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து பிளாட் போடுவதற்காக அந்த ஊரணியை சேதப்படுத்தியுள்ளனர். கால்நடைகள், வனவிலங்குகள் அந்த ஊரணியில் தான் தண்ணீர் குடித்துவந்தன. ஊரணியை சேதப்படுத்தியதால் மான்கள் மற்றும் வன விலங்குகள் தண்ணீர் கிடைக்காமல் வழிமாறி ஊருக்குள் வரவும் வாய்ப்பு உள்ளது. மேலும், தண்ணீரின்றி உயிரிழப்பு ஏற்படவும் அபாயம் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், வனவிலங்குகளுக்கு மீண்டும் குடிநீர் கிடைத்திடவும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
+
Advertisement