வைகுண்டம்,அக்.29: தாமிரபரணியில் முள்செடிகளை அகற்றுவது போலவே கால்வாய், வடிகாலிலும் அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் கூடுதல் கலெக்டர் ஐஸ்வர்யா தெரிவித்தார். தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 2023 டிசம்பர் மாதத்தில் வெள்ளப்பாதிப்பு மிக அதிகமாக இருந்தது. குறிப்பாக அகரம், ஆழிகுடி, முத்தாலங்குறிச்சி, ஆறாம்பண்ணை, கொங்கராயகுறிச்சி, வைகுண்டம் மற்றும் ஏரல் சுற்றுப்பகுதிகள் மிகவும் பாதிக்கப்பட்டன. ஆற்று கரைகள் சேதமடைந்தன. இதை சீரமைக்க பொதுப்பணித்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில் தாமிரபரணி ஆற்றில் முள்செடிகள் மற்றும் புதர்களை அகற்றும் பணி கடந்த 2024ம் ஆண்டு ஜுலை 6ந் தேதி கலியாவூர் மருதூர் அணையில் துவங்கியது.
இந்த பணியை கனிமொழி எம்.பி துவக்கி வைத்தார். முன்னாள் மாவட்ட கலெக்டர் லெட்சுமிபதி முன்னிலை வகித்தார். எக்ஸ்னோரா நிறுவனத்தின் வாடகை இல்லா இயந்திரம் மூலம் தனியார் மற்றும் அரசு உதவியுடன் நதியை சுத்தப்படுத்தும் பணி தொடர்ந்து நடந்தது. மருதூர் அணை, சென்னல்பட்டி, ஆழிகுடி, முத்தாலங்குறிச்சி ஆறாம்பண்ணை, கொங்கராயகுறிச்சி ஆகிய பகுதிகளில் இந்த பணி நடந்து முடிந்துள்ளது.
தொடர்ந்து மாவட்ட கலெக்டர் இளம்பகவத் ஆலோசனை படி நிதி பெறப்பட்டு மீண்டும் இந்த பணி துவங்கியது. ஏற்கனவே 3 கட்டமாக பல்வேறு பணிகள் நடந்துள்ள நிலையில் 4ம் கட்ட பணி பொன்னன்குறிச்சி தாமிரபரணி நதிக்கரையில் நடந்தது. கூடுதல் கலெக்டர் மற்றும் திட்ட இயக்குனர் ஐஸ்வர்யா கலந்துகொண்டு மரக்கன்று நட்டி, பதை விதைகள் மற்றும் விதைப்பந்துகளை விதைத்து தொடங்கி வைத்தார்.
அப்போது அவர் பேசியதாவது: ஆற்றின் கரைகளை பலப்படுத்திடும் நோக்கத்திலும், கரைகள் மண் அரிப்பினால் சேதமாகிடுவதை தடுத்திடும் வகையிலும் கரையோரங்களில் பனை மரங்கள் நட்டு வளர்க்கப்பட்டு வருகிறது. இதற்கு, மாணவர்கள், பொதுமக்கள் உறுதுணையாக இருக்க வேண்டும். தூத்துக்குடி மாவட்டத்தினை பொறுத்தவரை உள்ளாட்சித்துறை சார்பில் அதிக மரக்கன்றுகள் நடப்பட்டு வருகின்றன. இதற்காக ஒன்றிய அலுவலர்களிடம் வலியுறுத்தி வருகிறோம். மரக்கன்றுகள் நடும் பணிக்கு மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து ஆதரவு தரும். தாமிரபரணியை சுத்தப்படுத்திய பின்னர் மருதூர் மேலக்கால், கீழக்கால், வைகுண்டம் வடகால், தென்கால் மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தாமிரபரணி வடிகாலை சுத்தம் செய்திட நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.
நிகழ்ச்சிக்கு ஓய்வு பெற்ற ஐ.ஜி. மாசானமுத்து, உள்ளூர் பிரமுகர் அருள், கிராம உதயம் நிர்வாக கிளை மேலாளர் வேல்முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு வரவேற்று பேசினார். நிகழ்ச்சியில் வைகுண்டம் வட்டார வளர்ச்சி அலுவலர் சின்னத்துரை, பொதுப்பணித்துறை கூடுதல் பொறியாளர் அமீர்கான், கூடுதல் வட்டார வளர்ச்சி அலுவலர் கிருஷ்டோபர் தாசன், துணை தாசில்தார் லோகநாதன், பொன்னன்குறிச்சி பஞ்சாயத்து நடுநிலைப்பள்ளி பொறுப்பு தலைமை ஆசிரியை சரஸ்வதி, முன்னாள் கிராம பஞ்சாயத்து தலைவர் சங்கர் கணேஷ், முன்னாள் கவுன்சிலர் பொன்ராஜ், துணைத்தலைவர் கணபதி, மணிகண்டன், எக்ஸ்னோரா கபடி முருகன், தாமிரபரணி பாதுகாப்பு இயக்கம் சுவாமிநாதன், முருகன், வழக்கறிஞர் னிவாசன், சமூக சேகவர் சித்திரைவேல், முன்னாள் வைகுண்டம் பேரூராட்சி தலைவர் கந்தசிவசுப்பு, நதிக்கரை சுப்பிரமணிய சுவாமி கோயில் அறங்காவலர் சந்துரு, தங்கராஜ், கோபால், செல்வன்துரை, விஜயகுமார், ஆனந்த செல்வன், ஜெயராம், சுடலைமணி, மகளிர் குழுவினர்கள், பணியாளர்கள், சமூகஆர்வலர்கள் மற்றும் ஊர்பொது மக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளைமேல ஆழ்வார்தோப்பு கிராம உதயம், பொன்னன்குறிச்சி ஊர்மக்கள் செய்திருந்தனர்.
