சாத்தான்குளம், ஆக. 29: சாத்தான்குளம் அருகே வழக்கறிஞர் மீது தாக்குதல் நடத்திய வியாபாரியை போலீசார் தேடி வருகின்றனர். சாத்தான்குளம் அருகேயுள்ள படுக்கப்பத்து கிராமத்தைச் சேர்ந்தவர் பொன்பெருமாள் மகன் ஹாரீஸ் பிரபு (25). வழக்கறிஞரான இவர் நேற்று முன்தினம் மாலை படுக்கப்பத்து சிவன் குடியேற்றுப் பகுதியில் நடைபயிற்சி சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அதே பகுதியைச் சேர்ந்த வெங்கடேஷ் மகன் முத்துலிங்கம் (45) என்பவரை பார்த்து ஹாரீஸ் பிரபு சிரித்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து முத்துலிங்கம், என்னைப் பார்த்து நக்கல் செய்கிறாயா எனக்கூறி, ஹாரீஸ்பிரபுவை கண்டித்ததால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஹாரீஸ்பிரபு தாக்கப்பட்டார். காயமடைந்த அவர் சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து அவர் கொடுத்த புகாரின்பேரில் தட்டார்மடம் எஸ்ஐ பொன்னுமுனியசாமி வழக்குப்பதிவு செய்து முத்துலிங்கத்தை தேடி வருகிறார்.
+
Advertisement