தூத்துக்குடி,செப்.27: தூத்துக்குடி ஜார்ஜ் ரோடு, காந்தி நகர் மீனவர் காலனியை சேர்ந்தவர் ஜெகதீஷ் (40). இவர் தூத்துக்குடியில் உள்ள ஒரு தோணியில் கேங்மேனாக வேலை செய்து வந்தார். இவருக்கு மனைவி, 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். ஜெகதீஷ் கடந்த 19ம் தேதி தூத்துக்குடி பழைய துறைமுகத்திலிருந்து மாலத்தீவிற்கு உணவுப்பொருள்களை ஏற்றிச்சென்ற தோணியில் 12 பேருடன் சென்றுள்ளார். செப். 22ம் தேதி அதிகாலை மாலத்தீவு துறைமுகத்தில் நுழைய அனுமதிக்காக நிறுத்தப்பட்டிருந்த தோணியிலிருந்து ஜெகதீஷ் தவறி கடலுக்குள் விழுந்து விட்டார் என தெரிகிறது. இதுகுறித்து தகவலின் பேரில் மாலத்தீவு காவல் துறையினர், மாலி கடலோர காவல் படையினர் ஜெகதீஷை தேடி வந்தனர். மேலும் இது குறித்து தூத்துக்குடி மரைன் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அவரை மீட்க வேண்டும் என குடும்பத்தினர், கலெக்டர் மற்றும் எஸ்பியிடம் புகார் அளித்திருந்தனர். இந்நிலையில், மாலத்தீவு வெளித்துறைமுகம் அருகே கடலில் இறந்த நிலையில் கரை ஒதுங்கிய ஜெகதீஷ் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து மாலத்தீவு கடலோர காவல்படை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு பின்பு நாளை தூத்துக்குடிக்கு கொண்டு வரப்படுவதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் தூத்துக்குடியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
+
Advertisement