தூத்துக்குடி, அக். 24: தூத்துக்குடி- நெல்லை தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள பொட்டலூரணி கிராமத்தில் அனைத்து பஸ்களும் நின்று செல்ல வேண்டும். பொட்டலூரணி அருகே செயல்படும் மீன் கழிவு ஆலையை மூட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம மக்கள் நேற்று முன்தினம் சாலையில் திரண்டதோடு திடீரென மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்து விரைந்து வந்த வைகுண்டம் தாசில்தார் ஜாகீர் அகமது, தூத்துக்குடி ரூரல் டிஎஸ்பி சுதீர் மற்றும் போலீசார், மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்படாததால் மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்ய முயன்றனர். அப்போது போலீசார் மற்றும் பொதுமக்கள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து மறியலில் ஈடுபட்ட 120 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர் மாலையில் அவர்கள் விடுவிக்கப்பட்டனர். இதனிடையே அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்தல், சட்டவிரோதமாக போராட்டம்் நடத்த கூடுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் பொட்டலூரணியைச் சேர்ந்த சங்கரநாராயணன் (58), ஈஸ்டர்அந்தோனி ராஜ்(40), அனந்த வெங்கடநாராயணன்(39), சண்முகம் (34) உள்ளிட்ட 12 பேரை கைதுசெய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர் மாஜிஸ்திரேட் பிறப்பித்த உத்தரவின் பேரில் சிறையில் அடைத்தனர்.
+
Advertisement


