சாத்தான்குளம் அருகே வேலாயுதபுரத்தில் புனித குழந்தை தெரசம்மாள் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்
சாத்தான்குளம், செப். 24: வேலாயுதபுரம் புனித குழந்தை தெரசம்மாள் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. சாத்தான்குளம் அருகே சிதம்பரபுரம் பங்கிற்குட்பட்ட வேலாயுதபுரம் புனித குழந்தை தெரசம்மாள் ஆலய திருவிழா, நேற்று முன்தினம் மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இத்திருவிழா அக்.1ம் தேதி வரை நடக்கிறது. முதல் நாள் மாலை 6:30 மணிக்கு சொக்கன்குடியிருப்பு அருட்தந்தை லியோன் தலைமையில் ஜெபமாலை மற்றும் திருவிழா கொடியேற்றம் நடந்தது. தொடர்ந்து திருப்பலி நடந்தது. வள்ளியூர் அருட்தந்தை மணி மறையுரை ஆற்றினார். தொடர்ந்து 2ம் நாள் முதல் 8ம் நாள் வரை திருப்பலி, ஜெபமாலை மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்கிறது. 9ம் நாளான செப்.30ம் தேதி சாத்தான்குளம் வட்டார முதன்மை குரு செல்வ ஜார்ஜ் தலைமையில் காலையில் ஜெபமாலை, திருப்பலி, மற்றும் மாலை ஆராதனை நடக்கிறது.
தென்மண்டல பொது நிலையினர், பணியக இயக்குநர் ரியோ சிஸ் பெப்பி மறையுரை ஆற்றுகிறார். 10ம் நாளான அக்.1ம் தேதி காலை 7 மணிக்கு தூத்துக்குடி மறை மாவட்ட ஆயர் ஸ்டீபன் ஆண்டகை தலைமையில் திருவிழா திருப்பலி நடக்கிறது. மறை மாவட்ட முதன்மை குரு ஜோசப் ரவிபாலன் முன்னிலை வகிக்கிறார். இதில் சாத்தான்குளம் வட்டார முதன்மை குரு செல்வ ஜார்ஜ், தென் மண்டல பொறுப்பருட் தந்தை வெனிஸ், தென் மண்டல ஆர்.சி பள்ளிகளின் கண்காணிப்பாளர் ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்ட பலர் பங்கேற்க உள்ளனர். இரவு 7 மணிக்கு கொடி இறக்கம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை சிதம்பரபுரம் பங்குத்தந்தை ஜோசப் கலைச்செல்வன் மற்றும் இறை மக்கள் செய்து வருகின்றனர்.