கழுகுமலை,அக்.23: கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோயிலில் கந்தசஷ்டி விழா தொடங்கியது. வரும் 26ம் தேதி தாரகாசூரன் சம்ஹாரம் நடைபெறுகிறது. தமிழகத்தின் தென்பழநி என்றழைக்கப்படும் கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோயிலில் கந்தசஷ்டி திருவிழா, நேற்று தொடங்கியது. இதையொட்டி அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு உதயமார்த்தாண்ட அபிஷேகம், காலை 6 மணிக்கு மேல் கழுகாசலமூர்த்தி, வள்ளி, தெய்வானை அம்மனை எழுந்தருளச் செய்யும் பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து யாகசாலை பூஜைகள் நடந்தன. 9.30 மணிக்கு மேல் மகுடாபிஷேகம் நடைபெற்று கழுகாசல மூர்த்திக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது. மாலை 6 மணிக்கு மேல் பக்தர்கள் காப்பு கட்டி கந்தசஷ்டி விரதத்தை தொடங்கினர். விழா நாட்களில் காலை, மாலை வேளைகளில் கழுகாசலமூர்த்தி, வள்ளி, தெய்வானைக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார தீபாராதனை நடக்கிறது. இரவு 8 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட பல்வேறு வாகனத்தில் சுவாமி வீதியுலா நடைபெறுகிறது. திருவிழாவின் 5ம் நாளான நவ.26ம் தேதி மதியம் 12 மணிக்கு சுவாமி வெள்ளி சப்பரத்தில் எழுந்தருளி தாரகாசூரனை சம்ஹாரம் செய்கிறார். மறுநாள் 27ம் தேதி மதியம் 12 மணிக்கு சண்முகர் அர்ச்சனை வழிபாடு, மாலை 4 மணியளவில் சுவாமி வீரவேல் ஏந்தி வெள்ளி மயில் வாகனத்தில் போர்க்களம் வந்து 5 மணிக்கு மேல் சூரபத்மனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இரவு 7 மணிக்கு கழுகாசலமூர்த்திக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடக்கிறது. 9ம் நாளான 30-ம் தேதி இரவு 7 மணிக்கு மேல் திருக்கல்யாணம் நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாக அதிகாரி கார்த்தீஸ்வரன் மற்றும் கோயில் ஊழியர்கள், சீர்பாத தாங்கிகள் செய்து வருகின்றனர்.
+
Advertisement


