கோவில்பட்டி, அக். 23: கோவில்பட்டி பகுதிக்குட்பட்ட சங்கரலிங்கபுரம், 9வது தெருவைச் சேர்ந்தவர் முத்துமாரியப்பன் (54). கட்டிட தொழிலாளியான இவர், நேற்று மதியம் தனது நண்பரும் கட்டிட தொழிலாளியுமான சங்கரலிங்கபுரம் 3வது தெருவை சேர்ந்த சவரிமுத்து (40) என்பவருடன் சித்திரம்பட்டிக்கு சென்று கறி வாங்கிக் கொண்டு பைக்கில் ஊருக்கு திரும்பி கொண்டிருந்தார். பைக்கை முத்துமாரியப்பன் ஓட்டினார். ஆவல்நத்தம் விலக்கில் தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்ற போது மதுரையில் இருந்து நெல்லை நோக்கி வந்து கொண்டிருந்த கார் எதிர்பாராதவிதமாக பைக் மீது மோதியதுஇதில் முத்துமாரியப்பன், பைக்கின் பின்னால் அமர்ந்திருந்த சவரிமுத்து மற்றும் கார் ஓட்டி வந்த நாமக்கல் மாவட்டம் பொத்தனுார், அரசங்காட்டுத் தெருவை சேர்ந்த தமிழ்செல்வன் (40), காரில் இருந்த அவரது மனைவி இந்துஜா (33) ஆகியோர் காயமடைந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், காயமடைந்த அனைவரையும் மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவமனையில் பரிசோதித்த டாக்டர்கள், சவரிமுத்து இறந்துவிட்டதாக தெரிவித்தனர். மற்றவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
+
Advertisement


