கொடியேற்றத்துடன் தொடக்கம் சாத்தான்குளம், செப். 23: சாத்தான்குளம் அருகே உள்ள செட்டிவிளை பார் போற்றும் பரலோக அன்னை ஆலய திருவிழா, நேற்று முன்தினம் இரவு கொடியேற்றத்துடன் தொடங்கியது. இத்திருவிழா அக்.2ம் தேதி வரை 12 நாட்கள் நடைபெறுகிறது. முதல் நாள் காலை நாள் திருப்பலி, மாலை சாத்தான்குளம் வட்டார முதன்மை குரு செல்வ ஜார்ஜ் தலைமையில் திருச் ஜெபமாலை, திருக் கொடியேற்றம் நடந்தது. தொடர்ந்து பிரார்த்தனை, மறையுரை, நற்கருணை ஆசீர் நடந்தது. அருட்தந்தை ஜெபநாதன் முன்னிலை வகித்தார். இதில் தென்மண்டல பொறுப்பருட்தந்தை வெனிசு குமார், கொழுந்தட்டு பங்குத்தந்தை பீட்டர் பால், பெரியதாழை பங்குத்தந்தை சகேஷ் சந்தியா, துணை பங்குத்தந்தை ஜோசப் உள்ளிட்ட திரளான பங்கு மக்கள் கலந்து கொண்டனர்.
2ம் நாள் முதல் 9ம் நாள் வரை நவநாள் திருப்பலி, ஜெபமாலை பிரார்த்தனை, நற்கருணை ஆசீர் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்கிறது. 10ம் நாளான செப்.30ம் தேதி தூத்துக்குடி மறை மாவட்ட ஆயர் ஸ்டீபன் ஆண்டறிக்கை தலைமையில் காலை 7 மணிக்கு பெருவிழா சிறப்பு கூட்டுத்திருப்பலி, முதல் திருவிருந்து உறுதி பூசுதல், ஆலய பொன்விழா மலர் வெளியிடல் நடக்கிறது. காலை 11 மணிக்கு திருமுழுக்கு திருப்பலி, மாலை அன்னையின் அற்புத திருவுருவ தேர் பவனி நடக்கிறது. 11ம் நாளான அக்.1ம் தேதி காலை ஆலய முதல் பங்குத்தந்தை அமலதாஸ் தலைமையில் தேரடி சிறப்பு நற்கருணை ஆசீர், தேரடி சிறப்பு திருப்பலி நடக்கிறது.
மாலையில் தூத்துக்குடி மறை மாவட்ட முதன்மை குரு ஜோசப் ரவி பாலன் தலைமையில் பிரார்த்தனை, திரு ஜெபமாலை, மறையுரை, நற்கருணை பவனி, நற்கருணை ஆசீர் உள்ளிட்டவை நடைபெறுகிறது. நிறைவு நாளான அக்.2ம் தேதி செட்டிவிளை பங்குத்தந்தை அந்தோணி தாஸ் தலைமையில் காலை திரு ஜெபமாலை, பிரார்த்தனை, சிறப்பு நன்றி திருப்பலி நடக்கிறது. மதியம் 12 மணிக்கு ஊர் பொது அசனம் நடைபெறுகிறது. திருவிழா ஏற்பாடுகளை செட்டிவிளை பங்குத்தந்தை அந்தோணிதாஸ் தலைமையில் திரு இருதய அருட்சகோதரிகள், ஊர் நிர்வாக குழு மற்றும் பங்கு இறைமக்கள் செய்து வருகின்றனர்.