குற்றவழக்குகளில் தொடர்புடைய நபரை துரத்தி பிடித்த காவலருக்கு பாராட்டு எஸ்பி ஆல்பர்ட்ஜான் சான்றிதழ் வழங்கி கவுரவிப்பு
தூத்துக்குடி, ஆக.22: தூத்துக்குடியில் குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்ட நபரை துரத்தி பிடித்து கைது செய்த போக்குவரத்துப்பிரிவு காவலருக்கு மாவட்ட எஸ்பி ஆல்பர்ட் ஜான் சான்றிதழ் வழங்கி பாராட்டு தெரிவித்தார். தூத்துக்குடி மத்திய போக்குவரத்து பிரிவு தலைமை காவலர் ஞானமுத்து கடந்த 18ம் தேதி இரவு குரூஸ்பர்னாந்து சிலை சந்திப்பில் போக்குவரத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, அவ்வழியாக வந்த குற்ற வழக்குகளில் தொடர்புடைய நபரை நிறுத்தி விசாரணை மேற்கொண்டபோது அவர் தப்பிச் சென்றுள்ளார். உடனே துரிதமாக செயல்பட்ட தலைமை காவலர் ஞானமுத்து, அந்த நபரை துரத்தி பிடித்து அருகில் உள்ள காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். அவரது இந்த நடவடிக்கையை பாராட்டி எஸ்பி ஆல்பர்ட் ஜான் சான்றிதழ் வழங்கினார்.