திருச்செந்தூர், அக். 18: திருச்செந்தூர் முருகன் கோயிலில் பக்தர்கள் பயன்பாட்டுக்காக தி சென்னை சில்க்ஸ் நிறுவனத்தினர் 14 இருக்கைகள் கொண்ட மின்கல (பேட்டரி) வாகனத்தை உபயமாக வழங்கினர். திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து வழிபட்டு செல்கின்றனர். அவ்வாறு வரும் பக்தர்களில் மூத்த குடிமக்கள், கைக்குழந்தைகளை வைத்திருப்பவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளி பக்தர்கள் கிரிப்பிரகாரத்தில் வந்து செல்வதற்காக கோயிலில் மின்கல வாகனங்கள் பயன்பாட்டில் உள்ளன.
இந்நிலையில் பக்தர்கள் பயன்பாட்டுக்காக தி சென்னை சில்க்ஸ் நிறுவனம் சார்பில் ரூ.12 லட்சம் மதிப்பிலான 14 இருக்கைகள் கொண்ட மின்கல வாகனம் உபயமாக வழங்கப்பட்டது. கோயில் முன்பு நடந்த நிகழ்ச்சியில் இணை ஆணையர் ராமுவிடம் தி சென்னை சில்க்ஸ் நிர்வாக இயக்குநர் வினித்குமார் மின்கல வாகனத்தை ஒப்படைத்து சாவியை வழங்கினார். நிகழ்ச்சியின் போது கோயில் கண்காணிப்பாளர் அஜித், தலைமை கண்காணிப்பு பொறியாளர் செல்வராஜ் உள்ளிட்ட பணியாளர்கள், தி சென்னை சில்க்ஸ் பொதுமேலாளர் ரமேஷ்குமார் மற்றும் பக்தர்கள் உடனிருந்தனர்.


