தூத்துக்குடி,அக்.18: தூத்துக்குடி வேலவன் வித்யாலாயா பள்ளியில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தூத்துக்குடி தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையம் சார்பாக தீபாவளி பட்டாசுகளை பாதுகாப்பாக வெடிப்பது பற்றிய விழிப்புணர்வு கருத்தரங்கம் உதவி மாவட்ட அலுவலர் நட்டார் ஆனந்தி வழிகாட்டுதலின்படி நடைபெற்றது. இந்த கருத்தரங்கில் நிலை அலுவலர் போக்குவரத்து முருகையா பள்ளி மாணவர்களுக்கு பட்டாசு வெடிப்பது எப்படி என்பது பற்றி விளக்கி கூறியது மட்டுமல்லாமல் அதை செய்முறை வாயிலாகவும் பிற தீயணைப்பு வீரர்களுடன் செய்து காட்டினார். மாணவர்கள் கேட்பதோடு மட்டும் இருந்து விட கூடாது என்பதற்காக மாணவர்களையும் பாதுகாப்பாக பட்டாசு வெடிக்க வைத்தார்.
எதிர்காலத்தில் யாரேனும் தீ விபத்தில் சிக்கி கொண்டால் எவ்வாறு காப்பாற்றுவது, தீவிபத்தில் உள்ள வகைகள் என்னென்ன அவற்றை எவ்வாறு கையாளுவது மற்றும் கட்டுப்படுத்துவது, தீவிபத்து ஏற்படாமல் காப்பதற்கான வழிமுறைகள் என அனைத்தையும் மாணவர்களுக்கு மனதில் புரியும் வண்ணம் சிறப்பான முறையில் எடுத்துரைத்து மாணவர்களை உற்சாகமூட்டி உயிர்ப்புடன் கருத்தரங்கத்தை நடத்தினார். தீயணைப்பு வாகனங்களை எவ்வாறு பயன்படுத்த வேண்டும், அதன் செயல்பாடுகள் என்னென்ன என்பதையும் தீயணைப்பு வீரர்கள் எடுத்துரைத்தனர். இந்த கருத்தரங்கமானது மாணவர்களுக்கு மட்டுமின்றி ஆசிரியர்களுக்கும் பயனுடையதாக அமைந்தது.


