தூத்துக்குடி,அக்.14: தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டையில் உள்ள தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்டரங்கில் பிரதம மந்திரி தானிய வள வேளாண்மை திட்டம் தொடக்க விழா கொண்டாடப்பட்டது. விழாவில் புதுக்கோட்டை வேளாண்மை உதவி இயக்குநர் சுரேஷ் வரவேற்று பேசினார். இதில் தூத்துக்குடி மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் பெரியசாமி திட்டத்தை துவக்கி வைத்து பேசினார். தோட்டக்கலை துணை இயக்குநர் சுந்தரராஜன், செயற்பொறியாளர் வேளாண்மை பொறியியல் துறை மகேஷ், வேளாண்மை துணை இயக்குநர் (மத்திய அரசு திட்டம்)அல்லிராணி ஆகியோர் கலந்து கொண்டு திட்ட விளக்க உரையாற்றினர். விழாவில் புதுடெல்லியில் பாரத பிரதமர் மோடியால் பிரதம மந்திரி தானிய வள வேளாண்மை திட்டம் என்ற புதிய திட்டத்தினை தொடங்கி வைத்த நிகழ்வு காணொலி வாயிலாக ஒளிப்பரப்பட்டது. இதனை தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டத்தில் மாவட்ட அளவிலும், வட்டார அளவிலும் மொத்தம் 13 இடங்களிலும் காணொலி காட்சி மூலம் விவசாயிகளுக்கு காண்பிக்கப்பட்டது.
இத்திட்டத்தின் மூலம் விவசாய பயிர்களின் உற்பத்தி திறனை மேம்படுத்துதல், பயிர் பல்வகைப்படுத்துதல் மற்றும் நிலையான விவசாய நடைமுறைகளை அதிகரித்தல், அறுவடைக்கு பிந்தைய சேமிப்பை அதிகரித்தல், நீர்பாசன வசதிகளை மேம்படுத்துதல், நீண்ட கால மற்றும் குறுகிய கால கடன் கிடைப்பதை எளிதாக்குதல் ஆகியவற்றை இத்திட்டத்தின் நோக்கமாகும். பிரதம மந்திரி தானிய வள வேளாண்மை திட்டத்தின் கீழ் 100 மாவட்டங்களை மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இவற்றில் தமிழ்நாட்டில் தூத்துக்குடி, சிவகங்கை, விருதுநகர் மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்கள் தேர்வு செய்யப்பட்டு இத்திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.