ஒன்றிய அரசின் 4 தொழிலாளர் தொகுப்பு சட்டங்களை ரத்து செய்ய சட்டமன்றத்தில் சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும்
தூத்துக்குடி,அக்.14: ஒன்றிய அரசு கொண்டுவந்துள்ள 4 தொழிலாளர் தொகுப்பு சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி சட்டமன்றத்தில் சிறப்பு சட்டம் இயற்ற வேண்டுமென அமைப்பு சாரா தொழிலாளர் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து அமைப்புசாரா தொழிலாளர் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில், கொம்பையா. ராமலட்சுமி, மனோன்மணி, நாகராஜன் உள்ளிட்ட பல்வேறு அமைப்புசாரா தொழில் சங்கங்களின் நிர்வாகிகள் மாவட்ட கலெக்டரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: ஒன்றிய அரசு 44 தொழிலாளர் சட்டங்களை ரத்து செய்து, அதற்கு மாற்றாக 4 தொழிலாளர் தொகுப்பு சட்டங்களை கொண்டு வந்துள்ளது. இந்த சட்டங்களையும், தொழிலாளர் நலவாரியங்களை பாதுகாக்கவும், நடப்பு சட்ட மன்ற கூட்டத்தொடரில் தமிழக அரசு சிறப்பு சட்டம் கொண்டு வரவேண்டும் அல்லது சிறப்பு கொள்கை வகுக்க வேண்டும். நலவாரியங்களுக்கு ஜிஎஸ்டி வரியில் ஒரு சதவீதம் ஒதுக்க வேண்டும். ஒன்றிய, மாநில பட்ஜெட்டில் அமைப்புசாரா தொழிலாளர் சமூக பாதுகாப்புக்காக 3 சதவீதம் நிதி ஒதுக்க வேண்டும். முத்தரப்பு தொழிலாளர் மாநாட்டை ஒன்றிய அரசு உடனே கூட்ட வேண்டும். மாவட்டம் தோறும் நலவாரியங்களுக்கான குறைதீர்ப்பாயம் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 21 அம்ச கோரிக்கைகள் நிறைவேற்ற வலியுறுத்தி மனுவில் கூறப்பட்டுள்ளது.