கோவில்பட்டி, அக். 14: கோவில்பட்டியில் இபிஎப்ஓ நெல்லை மண்டலம் சார்பில் தொழில் முனைவோர் விழிப்புணர்வு ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்தில் சிட்கோ தொழிற்பேட்டையில் உள்ள தொழில் நிறுவன உரிமையாளர்கள், ஆடிட்டர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர். சிறப்பு விருந்தினராக நெல்லை அமலாக்க அதிகாரி கோமதி சுந்தரவேல் கலந்து கொண்டு பேசுகையில், வேலைவாய்ப்புடன் கூடிய ஊக்கத்தொகை திட்டம் நாட்டில் 3.5 கோடிக்கும் அதிகமான வேலைவாய்ப்புகளை ரூ.99.446 கோடி செலவினத்துடன், 2 ஆண்டுகளில் உருவாக்கப்படுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த திட்டத்தின் நன்மைகள் 2025 ஆகஸ்ட் 01 முதல் 2027 ஜூலை 31 வரை உருவாக்கப்படும் வேலைகளுக்குப் பொருந்தும். மேலும் இந்தத் திட்டம், 2 பகுதிகளைக் கொண்டுள்ளது. அதன்படி பகுதி அ:தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் பதிவு செய்த முதல் முறை ஊழியர்களை இலக்காகக் கொண்டு, இந்தப் பகுதி இரண்டுதவணைகளில் ரூ.15,000 வரை ஒரு மாத தொழிலாளர் வருங்கால வைப்புநிதி ஊதியத்தை வழங்கும். ரூ.1 லட்சம் வரை ஊதியம் பெறும் பணியாளர்கள் இதற்கு தகுதி உடையவர்கள்.
இதேபோல் பகுதி ஆ:அனைத்துத் துறைகளிலும் கூடுதல் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதை உள்ளடக்கும். உற்பத்தித் துறையில் சிறப்பு கவனம் செலுத்தும். ரூ.1 லட்சம் வரை ஊதியம் பெறும் பணியாளர்களுக்கு உரிமையாளர்கள் ஊக்கத்தொகை பெறுவார்கள். குறைந்தபட்சம் ஆறு மாதங்களுக்கு நிலையான வேலை வாய்ப்புடன் கூடுதலாக பணிபுரியும் ஒவ்வொரு ஊழியருக்கும். இரண்டு ஆண்டுகளுக்கு. மாதத்திற்கு ரூ.3000 வரை உரிமையாளர்களுக்கு அரசு ஊக்கத்தொகை வழங்கும். உற்பத்தித் துறையைப் பொறுத்தவரை, ஊக்கத்தொகை 3-வது மற்றும் 4வது ஆண்டுகளுக்கும் நீட்டிக்கப்படும். சிட்கோ தொழிற்பேட்டையில் உள்ள தொழில் நிறுவன உரிமையாளர்கள் தங்களது பணியாளர்களுக்கு ‘பிஎப்’ பிடித்தம் செய்து அதனை தவறாமல் அலுவலகத்தில் கட்ட வேண்டும். இதன் மூலம் தொழிலாளர்களின் வாழ்வு மேம்படும், என்றார்.