ஆறுமுகநேரி, செப்.13: உடன்குடி காலன்குடியிருப்பு சாயக்காரதெருவை சேர்ந்தவர் முருகன் மகன் முத்து கணேஷ்(24). இவர் வெல்டிங் வேலை செய்து வருகிறார். இவரது சகோதரி ஐஸ்வர்யா, காயல்பட்டினம் வண்டிமலைச்சியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த பேச்சிமுத்து மகன் கார்த்திக்(32). என்பவரை திருமணம் செய்து அப்பகுதியில் தனியாக வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு இருந்து வந்துள்ளது. இதனால் கார்த்திக்கும் பெண்ணின் வீட்டாருக்கும் இடையேயும் தகராறு இருந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் மாலை கணவன், மனைவி இடையே பிரச்னை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து ஐஸ்வர்யா தனது அண்ணன் முத்து கணேஷ் செல்போனில் தொடர்பு கொண்டு தகராறு குறித்து தெரிவித்துள்ளார். இதையடுத்து அங்கு வந்த ஐஸ்வர்யாவின் தந்தை முருகன், தாய் மாரியம்மாள், அண்ணன் முத்துகணேஷ் மற்றும் உறவினர் சண்முகசுந்தரம் ஆகியோர் ஐஸ்வர்யாவை எப்படி அடித்து துன்புறுத்தலாம் என கார்த்திக்கை தட்டி கேட்டுள்ளனர்.
அப்போது இரு தரப்புக்கும் இடையே ஏற்பட்ட தகராறு முற்றி கைகலப்பு ஏற்பட்டுள்ளது. இதில் ஆவேசமடைந்த கார்த்திக் வீட்டில் இருந்த அரிவாளால் முத்து கணேஷை தாக்கியுள்ளார். இதில் முத்து கணேஷின் முதுகு மற்றும் கை விரல்களில் வெட்டு காயம் ஏற்பட்டது. மேலும் தடுக்க வந்த சண்முகசுந்தரத்தையும் கை விரலில் வெட்டியுள்ளார். இருவரையும் உறவினர்கள் மீட்டு காயல்பட்டினம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் இச்சம்பவம் குறித்து முத்துகணேஷ் அளித்த புகாரின் பேரில் எஸ்ஐ சுந்தர்ராஜ் வழக்கு பதிவு செய்தார். இன்ஸ்பெக்டர் தங்கராஜ் விசாரணை நடத்தி கார்த்திக்கை கைது செய்து திருச்செந்தூர் நீதிமன்றதில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தார்.