தூத்துக்குடி, நவ.12: தூத்துக்குடியில் விசைப்படகு மீனவர் தாக்கப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து விசைப்படகு மீனவர்கள் நேற்று கடலுக்கு செல்லவில்லை. தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் இருந்து அந்தோணி என்பவருக்கு சொந்தமான பதிவு செய்யப்படாத விசைப்படகில் மீனவர்கள் நேற்று முன்தினம் மீன்பிடி தொழிலுக்கு சென்று திரும்பி வந்துள்ளனர். அப்போது அவர்கள் இனிகோ நகர் பகுதியைச் சேர்ந்த நாட்டுப்படகு மீனவர்களின் வலையை சேதப்படுத்தியதாக கடலினுள் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இரவு மீன்பிடி துறைமுகத்தில் விசைப்படகு வந்து மீன்களை இறக்கிக் கொண்டிருந்த போது இனிகோ நகர் பகுதியை சேர்ந்த 10 பேர் விசைப்படகிற்குள் சென்று அங்கிருந்த திரேஸ்புரம் கனிஷ்டன் (35), சிலுவையார் உள்ளிட்டவர்களை தாக்கியுள்ளனர். இதில் காயமடைந்த அவர்கள் 3 பேரும் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது வழக்குப்பதிந்து கைது செய்யப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி, விசைப்படகு தொழிலாளர்கள் மீன்பிடிக்க செல்லாமல் நேற்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் பெரும்பாலான விசைப்படகுகள் மீன்பிடிதுறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.
+
Advertisement
